சந்திரனுக்குப் போவதில்…

கடந்த பாரதீய ஜனாதா ஆட்சியில் இந்தியா முன்னெப்பொழுதும் இல்லாததைவிட உலகநாடுகளின் கவனத்தைப் பலமுறை கவர்ந்தது. தெற்காசியாவைத் தவிர பலநாடுகளில் இந்தியாவைப் பற்றிய அறிவு கணக்கிலெடுத்துக்கொள்ளமுடியாத அளவுக்கும் குறைவாகவே கணப்பட்டுவந்தது முற்றிலும் உண்மை. பல படித்த அமெரிக்கர்களுக்கே இந்தியா என்றொரு நாடு இருக்கிறது என்பதே தெரியாத நிலை. அந்தச் சூழலில் தான் இந்தியா தன்னுடைய இரண்டாவது அணுகுண்டுச் சோதனையை நிகழ்த்தியது. இது உலகம் முழுதும் இந்தியாவை பற்றிய ஒரு விழிப்புணர்வுக்கு வழிவகுத்தது என்பதில் ஐயமில்லை. அதன் பின்னர் என்னதான் பல பொருளாதார, தொழில்நுட்பத் தடைகளை உலகநாடுகள் விதித்தாலும் அவைகளைக் கடந்தும் இந்திய தன்னுடைய வளர்ச்சியை அதிகரித்துக்கொண்டுதான் வந்துள்ளது.

அணுகுண்டுச் சோதனையைத் தொடர்ந்து இந்தியா தன்னுடைய GSLV இராக்கெட்டுகளை ஏவிச் சாதனை செய்ததது. இதுவரை உலகில் ஐந்துநாடுகளே இத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதால் இதுவும் இந்தியாவின் பெயர் உலக அரங்கில் பரவலாகப் பேசப்பட வழிவகுத்தது. இதன் முக்கிய காரணம் என்னவெனில் GSLV தொழிநுட்பத்தில் பயன்படும் இராக்கெட் தொழில்நுட்பம் தான் கண்டம் விட்டு கண்டம் பாயும், பல ஆயிரம் கிலோமிட்டர்கள் கடந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்கப் பயன்படுகிறது என்பதே. இத்தகைய இராக்கெட்டுகளுக்கான முக்கிய தேவை கிரையோஜெனிக் என்னும் தொழில்நுட்பத்தில் இயங்கும் எந்திரங்கள்தான். இவை இந்தியாவில் ஆராய்ச்சி அளவிலேயே இருந்துவந்தாலும் சோதனைத் தேவைக்கு மட்டுமென அவை ரஷ்ய நாட்டிடம் இருந்து வாங்கியே GSLV விண்ணூர்திகள் விண்ணில் ஏவப்பட்டன.

இத்தகைய GSLV விண்ணூர்தி ஏவலில் ஏற்பட்ட வெற்றியின் தொடர்ச்சியாகவே அப்போதைய வாஜ்பேயி அரசு சந்திரனுக்கு விண்கலன் ஒன்றை ஏவும் திட்டத்திற்கான அறிவிப்பையும் வெளியிடப்பட்டது. 2003 ஆம் ஆண்டு சுதந்திர தினப் பேருறையில் அவ்வறிவிப்பை வெளியிட்ட வாஜ்பேயி, சந்திராயன் – 1 எனப் பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் மூலம் வரும் 2008 சந்திரனுக்கு ஆளற்ற அவ் விண்கலம் செலுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இதில் முக்கிய அம்சம் என்னவெனில் 400 கோடி செலவு பிடிக்கக் கூடிய இத்திட்டம் இந்தியாவுக்குத் தேவையா என்பதுதான். பொருளாதாரத்தில் பின் தங்கிய இன்னும் எத்தனையோ அடிப்படைத் தேவைகளே பூர்த்திசெய்யப்படாத நிலையில் இருக்கும் பொழுது இவ்வளவு பணத்தையும் எந்தஒரு பிரயோஜனமும் இல்லாத, (அதாவது சந்திரனுக்கு விண்கலனை அனுப்பிய நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையத் தவிர) ஒரு திட்டத்தில் செலவிடுவது நியாயமா? என்பது பலரின் கருத்து.

இந்தப் பணத்தில் நல்ல சாலைகள் அமைக்கலாம், கிராமங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கலாம். வேலை வாய்ப்பைப் பெருக்க நட்டின் தேவைக்கு ஏற்ப தொழிற்சாலைகளை ஏற்படுத்தலாம், அவையே இன்றைய இந்தியாவின் தேவை. உலகநாடுகள் மத்தியில் வளமான, பொருளாதாரத்தில் வலிமையான இந்தியாவால் மட்டுமே ஒரு போற்றத்தக்க எல்லாராலும் மெச்சத்தக்க நிலையை அடையமுடியுமே தவிர, தன்னுடைய குடிமக்களில் பாதிப்பேர் தினசரி சரியான உணவு கூட கிடைக்காமல் திண்டாடும் நிலையில், எத்தனையோ பட்டினிச் சாவுகள் விவசாயிகள் மத்தியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சூழலில் சந்திரனுக்கு விண்கலன் ஏவும் முயற்சியில் வரிப்பணத்தை செலவு செய்வது தகாதது என்ற ஒரு பாலரின் கருத்தும் ஏற்றுக்க்கொள்ளத்தக்கதாகவே உள்ளது.

அதுமட்டுமல்லாது, சந்திரனுக்கு விண்கலன் என்ன? மனிதனை அனுப்பியே பல ஆண்டுகள் ஆகிவிட்டபோது நாம் மீண்டும் பலகோடிகள் செலவு செய்து இம்முயற்சியில் இறங்குவது எவ்விதத்தில் நியாயமாக இருக்கமுடியும். இராக்கெட் தொழிநுட்பம் வர்த்தகரீதியில் வெற்றிபெற்றது போல இந்தியா பணத்தை செலவிடும் போது சந்திராயன் வர்த்தகரீதியில் இந்தியாவிற்கு எவ்வித பலனைக் கொடுக்கப்போகிறது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

ஆனால் ஆய்வாளர்கள் ஒரு சிலர் சொல்லுவது போல எரிபொருள் தேவை அதிகரித்து வரும் இக்காலத்தில் புதிய எரிபொருள் ஆதாராங்களை விண்ணில் தேடும் முயற்சியாக இன்றைய வளர்ந்த நாடுகள் விண்ணியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அவற்றோடும் நாமும் களத்தில் இருக்கவேண்டிய கட்டாயம் இன்றைய வளர்ந்துவரும் இந்தியாவுக்கு அதிகம் உண்டு. மிகக் குறைவான அளவே பூமியில் உள்ள யுரேனியம் போன்ற தாதுக்கள் மேலும் மேலும் குறைந்துகொண்டே போக, நாம் புதிய எரிபொருள் ஆதாரத்தை கண்டறிய வேண்டிய காலம் இது. இது மனித குலத்திற்கே மிகவும் அவசியம். சந்திரனில் ஹீலியம்3 என்ற தாது அதிக அளவில் காணப்படுகிறது, இது பூமியின் எரிபொருள் தேவையை பல ஆயிரம் கால ஆண்டுகளுக்கு பூர்த்திசெய்யவல்லது என்பது ஆய்வளர்களின் கருத்து.. மேலும் அங்கு யுரேனியம் போன்ற தாதுக்கள் கிடைக்கின்றனவா என்ற ஆய்வும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

இந்த காலகட்டத்தில் நாம் சந்திரனைப் பங்கு போட்டுக்கொள்ள எடுக்கும் முன்முயற்சிதான் நம்முடைய எதிர்காலத்தில் நாம் நம்மை வல்லரசாக்க எடுக்கும் முதல் பெரிய முயற்சியாகவும் இருக்கலாம்.

-பரமன்

 

Comments

comments