மாற்று அரசியலின் அவல நிலை

அரவிந்த் கேஜ்ரிவாலும், பிரசாந்த் பூசனும், வார்த்தைக்கு வார்த்தை இந்திய அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவந்துகொண்டிருப்பதாக பீற்றிக்கொண்டிருக்கும் போது, மரபுரீதியான அரசியலுக்குப் போட்டி போடும் வகையில் ஆம் ஆத்மி தொண்டர்கள் நடந்து கொண்ட விதம், மாற்று அரசியல் என்பது இந்தியாவில் சாத்தியமா என்றே கேள்வியை இன்னும் வழுப்படுத்துகின்றது. மாற்று முயற்சியாயினும், களம் என்னவோ அதே குட்டை தானே! அங்கே ஊறிய மட்டைகள் வேறு வேறு விதமான பண்புகளை வெளிப்படுத்தும் என்று எவ்வாறு உறுதியாகச் சொல்ல இயலும்.

அரவிந்த் கேஜ்ரிவாலை, குஜராத் காவல்துறை, சிறிது நேரம், விசாரனைக்காக முடக்கிய போது, அதுவும், தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு, தேர்தல் நெறிமுறைகள் வழக்கத்துக்கு வந்துவிட்ட பிறகு, இத்தகைய சிறிய விசாரனைக்களுக்குக் உட்படுத்தியது கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆம் ஆத்மி தொண்டர்கள், தெருவிற்கு வந்து அடிதடியில் இறங்கிவிட்டனர், இத்தகைய வேகமான எதிருக்கு எதிர் போக்கு மரபு ரீதியான அரசியல் கட்சிகளில் கூட இல்லை என்றே சொல்லவேண்டும்.

அது போக, மாற்று அரசியலுக்காக வக்காலத்து வாங்கும் கட்சி என்ற நிலையில் மிக அதிகமான பொறுப்புகள் ஆம் ஆத்மி கட்சிக்கு உண்டு. இது மூத்த தலைவர்களிடம் மட்டுமல்லாது, இரண்டாம் மற்று மூன்றாம் தரத் தலைவர்களிடமும் இருக்க வேண்டியது அவசியம்.
சமீப காலமாக, கேஜ்ரிவால் செய்வது போல, போகிற போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசிக்கொண்டு போவது, எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாத, வெறுமனே ஊடகங்களைக் கவரும் விதமான வசைபாடல்கள், முழுமையாக ஆய்வு செய்து கொண்டு வெளிப்படுத்தாத கொள்கை வெளிப்படுத்தல்கள், கருத்துக்கள் போன்றவை தன்னுடைய எதிரியைத் தாக்கித் திரும்பும் குறுந்தடி போன்றது (boomerang) சரியாகக் கையாளப்படாவிடில் அது ஏவியவரையேத் தாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆக மாற்று அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் காலத்தே, தன்னுடைய கட்சியின் போக்கிலும், கொள்கையிலும் மாற்றத்தை கொண்டு வராவிடில், ஆம் ஆத்மியின் அரசியல் ஒரு ஏமாற்ற அரசியல் ஆகிப்போய்விடும்.

பரமன்.

Comments

comments