மரபு நூலகங்கள் ஒரு காலவழு(Anachronistic)
ஒரு பழக்கம் முழுமையாக வழக்கொழிந்துவிடுகிறது என்றால் அப்பழக்கத்திற்கெதிரான மாற்று வழக்கத்திற்கு வந்துவிட்டது என்று அர்த்தம். அது மட்டுமில்லாது அப்பழக்கத்தை தொடரமுடியாத படி இயற்கையான மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். ஆக என்னுடைய பதிவு நூலகங்களுக்கோ அல்லது பல்வேறு நூல்களை படிப்பதற்கோ எதிராக எழுதப்பட்டது அல்ல. பல லட்சங்கள் செலவு செய்து கட்டிடங்கள் கட்டி, லட்சங்கள் செலவு செய்து புத்தகங்களை வாங்கி, நூலகரை நியமித்து அவருக்கு சம்பளம் கொடுத்து அந்த நூலகத்திற்கு வந்து யாருமே படிக்கவில்லையென்றால் அதனால் என்ன பயன்?
நிகழ்காலத்தில் நூலகங்களுக்குச் சென்று படிக்கவேண்டிய தேவை இல்லாமலே போய்விட்டது. புத்தகங்களை அச்சிடுவைதை உலகமுழுதும் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். பெரிய பெரிய பத்திரிக்கைகள் கூட தங்களுடைய அச்சுப்பிரதியை நிறுத்திவிட்டார்கள், பலர் குறைத்துக்கொண்டுவிட்டார்கள். ஒரு கணினியில் பல லட்சக்கணக்கான புத்தகங்களை எந்த செலவும் இல்லாமல் பதிவிரக்கம் செய்து படிக்கூடிய வாய்ப்பு இருக்கும் பொழுது கணிணி இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கன்னிமாரா நூலகத்தைப் போல பலமடங்கு நூல்களைச் சேகரித்துக்கொள்ள முடியும். எல்லை இல்லா அறிவுக்களஞ்சியமான இணையத்தில் தேவயான தகவல்களை சில நொடிகளில் தேடிவிடமுடியும். பல நூலகங்கள் புத்தகங்களை எண்ணிய வடிவில் (Digital) மாற்றி கணினி வழி நாம் தேடிக்கொள்ள வழி செய்துள்ளார்கள். அவற்றை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை (தெரியாத) மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே நாம் படிக்கும் பழக்கத்தை தூண்டுவதற்காக செய்யக்கூடிய முயற்சியாக இருக்கும்.
என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா 32 தொகுதிகளின் மொத்த விலை ரூபாய் ஒரு லட்சம். அதன் மொத்த பக்கங்கள் 36000 அதில் 5 மில்லியன் தலைப்புகளைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். இதையும் 2012க்கு பிறகு அச்சிடுவதை நிறுத்திவிட்டு எண்ணிய வடிவில் மட்டுமே வெளியிடுகிறார்கள். அதே சமயத்தில் விக்கிபீடிய செயலி உங்களுடைய ஸ்மார்ட் போனில் இருந்தால் நீங்கள் 45மில்லியன் தலைப்புகளில் அதிகாரப்பூவமான தகவல்களை நொடிப்பொழுதில் தேடி எடுத்துப் படிக்கமுடியும். ஆக தற்சமயம் இல்லையென்றாலும் இன்னும் சில ஆண்டுகளில் மரபு நூலகங்கள் காலவழுவாகிவிடும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதனால் நாம் எப்படி கடிதம் அனுப்பவேண்டும் என்று அஞ்சலகங்களை நாடுவதில்லையோ, பணம் எடுக்கவேண்டும் என்று வங்கிகளின் காசாளர்களை அணுகுவதில்லையோ அதுபோல படிப்பதற்கு நூலகங்களை நாடவேண்டிய தேவை இல்லவே இல்லை.
-பரமன்