சித்திரை ஒன்று

இனி வரும் ஒவ்வொரு சித்திரை ஒன்றிலும், நாம் சந்திக்கப்போகும் தவிர்க்கமுடியாத கேள்வி “அது சரியான தமிழ் வருடப் பிறப்பா?” திக மற்றும் திமுக வினர் ‘தை’ தான் தமிழர்களின் வருடப்பிறப்பு சித்திரை இல்லை அதனால் நாங்கள் வாழ்த்துச் சொல்லவே மாட்டோம் என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டார்கள். கருணாநிதி கொண்டுவந்த சட்டத்தை ஜெயலலிதா நீக்கிவிட்டதாலும், அதன்பிறகு மீண்டு அதே சட்டத்தை கொண்டுவருவதற்கு அவர்களுக்கு இதுவரைக்கும் வாய்ப்புக் கிடைக்காததாலும் மிகுந்த மன உலைச்சலில் இருக்கிறார்கள்.

இதற்கிடையில் இந்தவருடம், தமிழக ஆளுநர் வெளியிடுவதற்காக எழுதிய வாழ்த்துச்செய்தியில் யாரோ ஒரு இரண்டாம்கட்டத் தமிழறிஞன், தொல்காப்பியத்தில் சித்திரைதான் முதல்மாதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லிவிட வெகுண்டெழுந்த அண்ணன், பேராசிரியர் முனைவர் திரு.இராமமூர்த்தி அவர்கள், நான் தொல்காப்பியம் முழுவதும் தேடிவிட்டேன் ஆனால் சித்திரைமுதல் மாதம் என்று எங்குமே தொல்காப்பியர் குறிப்பிடவில்லை என்று தெளிவாக மறுத்துவிட்டார்.

இதற்கிடையில் ஹிஜ்ரி வருடபிறப்பை மட்டும் வருடம் வருடம் கொண்டாடும் மற்றொரு நண்பர் ஓடிவந்து,

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரையல்ல உனக்குத் தமிழ் புத்தாண்டு
அண்டிப் பிழைக்கவந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கொவ்வாத அறுபது ஆண்டுகள்!
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு!

என்ற மீம்ஸைப் போட்டு, “பார்த்துக்கங்கப்பா, பாவேந்தரே சொல்லிப்புட்டார் ‘தை’ தான் தமிழ்புத்தாண்டு” என்று சொல்ல, ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது…!

பாவேந்தர், அறுபது ஆண்டுகளை அறிவுக்கொவ்வாதது என்று சொல்லிவிட்டர் அதே சமயத்தில் அறிவுக்கொத்த ஆண்டுகள் ஏதேனும் இருப்பதாகச் சொல்லியிருக்கிறாரா? இல்லை, இந்த அறுபது ஆண்டுகளை விட்டுவிடு, தையிலிந்து மாதங்களை வைத்துக்கொள் என்று மட்டும் செல்லிவிட்டுச் சென்றுவிட்டாரா என்று எனக்குத் தெரியவில்லை. பகுத்தறிவுப் பாசறைகளில் ஏதேனும் பதிவுகள் இருக்கலாம்! ஆனால் பகுத்தறிவுவாதிகளைப் பொருத்தவரை பாவேந்தரோ, பெரியாரோ அல்லது கலைஞரோ ஏதாவது சொன்னால், அதிலவர் மெய்ப்பொருள் காண நிச்சயமாக முயலார்!.

என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை! நாம் தான் ஏதாவது ஆராய்ச்சி செய்யவேண்டுமா என்று நினைத்துக்கொண்டு, வானவியல், தொல்காப்பியம், குறிஞ்சிப்பாட்டு என சங்க இலக்கண, இலக்கியங்களை எடுத்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதற்கிடையில் ஒருவர் ஓடிவந்து, ஐயா, சித்திரைதான் முதல்மாதம் என்று தொல்காப்பியர் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், அவர் இலைமறைகாயாக, தமிழ் முனைவர்களுக்கு மட்டும் தெரியும்படி சொல்லிவைத்திருக்கிறார், எல்லத்தையும் ஓபனாக எழுதுவதென்றால் அதற்கெதற்கு தொல்காப்பியன், லோக்கல் இடதுசாரி “பகுத்தமிழறிவாளனைக்” கொண்டு எழுதியிருக்கலாமே என்றும் நக்கல் அடித்துவிட்டுச் சென்றார்.

அப்படியானால் ஏதாவது உண்மை இருக்குமோ, சித்திரைதான் சரியான தமிழ் முதல்மாதமா என்று ஆராயும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்…. நேரம் கிடைக்கும்போது தொடரும்….

—பரமன்

Comments

comments