மக்களாட்சி (எதிர்) பேரினவாத ஆட்சி (Democracy Vs Majoritarianism)

மக்களாட்சி (எதிர்) பேரினவாத ஆட்சி (Democracy Vs Majoritarianism)

ஒரு வழியாக தேர்தல் சூடு தணிந்திருந்திருக்கிறது. முடிவுகள் வெளியாகிவிட்டன, இன்னும் ஐந்து வருடங்களுக்கான இந்தியாவின் தலைவிதி மிகத் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. பலருக்கு மகிழ்ச்சியும், சிலருக்கு வருந்தம் கலந்த பயஉணர்ச்சியையும் தந்ததாக முடிவுகள் அமைந்திருக்கின்றன. இந்த தேர்தல் முடிவுகள் பல மாற்றங்களை இந்திய அரசியலில் முன்னெடுத்திருக்கின்றன. இவை நீண்ட கால இந்திய மக்களாட்சியின் அடித்தளத்தில் ஏற்படுத்திய பூகம்பத்தின் விளைவுகள் எல்லோராலும் வெளிப்படையாகவே உணரமுடிகிறது.

இந்தியா, மக்களாட்சியை விடுத்து பெரும்பாண்மையின ஆட்சிக்கு வழிபெயர்ந்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இரண்டுக்கும் வேறுபாடு என்ன என்று கேட்டால், பெரும்பான்மையாக வாக்குகள் பெற்ற கட்சி ஆட்சியில் அமர்வது மக்களாட்சி. இந்த பெரும்பான்மை வாக்குகள் ஜாதி, மத, மொழி, இன பேதமின்றி தரப்பட்டதாக இருந்தால் தான் அது மக்களாட்சி அவ்வாறு இல்லாமல் ஏதாவது ஒரு வகையில் (ஜாதி,மத,இன, மொழி) பெரும்பான்மை மக்கள் ஓரணியில் திரண்டு வாக்களித்தால் அது பேரினவாத ஆட்சி.

கடந்த 67 ஆண்டுகளில் பல கட்சிகள் தனது ஓட்டு வங்கிகளுக்காக ஜாதி, மதம், மொழி, இன ஓட்டுகளை ஒன்று படுத்தி அவைகளை தக்க வைத்துக்கொள்ளுவதற்காக அவர்களுக்கு போலியான உத்திரவாதங்களை அளித்து அவைகளை பெரும்பாலும் நிறைவேற்றாமல் தொடர்ந்து அவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்திவந்தனர். காலப்போக்கில், கல்வி, சமூக விழிப்புணர்வு, அறிவியல் மாற்றத்தால் விளைந்த வேகமான செய்தித் தொடர்பு போன்றவை இந்த போலியான அரசியல் சார்பினை மக்கள் தெள்ளத்தெளிவாக உணர்ந்து கொண்டார்கள். போலியான அரசியல் இந்த தேர்தல் முடிவுகளோடு முற்றுப்பெற்றுவிட்டதாகத் தான் கருதவேண்டும்.

ஜாதி மத பேதமின்றி பெறவேண்டிய ஓட்டுகளை சிறுபான்மை, பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் போன்றோர் ஒற்றுமையாக ஓட்டளித்தால் அது மத சார்பிண்மை ஓட்டுகள் என்றும், அத்தகையோர் அல்லாதார் ஒற்றுமையாக வாக்களித்தால் அது மதவெறி ஓட்டுகள் என்றும் செய்யப்பட்ட பல பிரச்சாரங்களால் ஏற்பட்ட எதிர்வினை, நியூட்டனின் விதிக்கேற்ப ஒவ்வொரு விசைக்கும் எதிர் விசை உண்டு என்பதற்கினங்க பெரும்பான்மையினர் (பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட) ஓட்டுகள் பெரும்பான்மையாக விழ வெற்றி பெற்றிருக்கிறார் நரேந்திர மோடி.

இங்கே என்னுடைய கருத்தும் நாம் மக்களாட்சியை விடுத்து பேரினவாத ஆட்சியில் காலடி எடுத்துவைத்திருக்கிறோம் என்பதே. ஆனால் இந்த மாற்றத்திற்கு கண்டிப்பாக காங்கிரஸும் மற்ற போலி மதசார்புக் கட்சிகளுமே பொருப்பேற்க வேண்டும். சிங்கள பேரினவாத ஆட்சியால் தான் இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு உள்நாட்டுப் போருக்கு வழி வகை செய்யப்பட்டது. இந்தியாவில் பெரும்பான்மையின ஆட்சியில் சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்படும் என்று நான் சொல்வதற்கில்லை ஆனால் அவர்களுடைய குரலுக்கு செவி சாய்க்கப்படமாட்டாது என்பது திண்ணம். பெரும்பான்மையின ஆட்சி இந்தியா போன்ற நாட்டுக்கு உகந்தது அல்ல ஆனால் அதை உணர்ந்திருந்தும் காங்கிரஸ், மற்றும் பல கட்சிகள் ஓட்டுக்காக மக்களை பிளவு படுத்துவதிலேயே குறிக்கோளாயிருந்தன.

பெரும்பான்மை இந்தியர்கள் தமிழர்களின் குரலுக்கு செவிமடுப்பதில்லை, நேற்றுவரை தமிழகத்தால் கொஞ்சம் ஆதிக்கம் செலுத்த முடியும் என்றிந்த நிலை மாறி இன்று மோடி அரசு விரும்பினால் மட்டும் தான் என்ற நிலை உண்டாயிருக்கிறது. இது தமிழர்களுக்கு எப்பொழுதும் பாதகமாகவே அமையும் என்று சொல்வதற்கில்லை. மோடி ஒரு நல்ல சர்வாதிகாரியாக செயல்பட்டால் இந்தியா வெகு விரைவில் முன்னேறும் ஆனால் அவர் செவிசாய்க்குமளவுக்கு யாரால் ஆதிக்கம் செலுத்தமுடியுமோ அவர்களுக்கே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வெற்றி.

பரமன்.

Comments

comments