தேர்தல் ஆணையமும் அத்துமீறல்களும்

தேர்தல் ஆணையமும் அத்துமீறல்களும்

தொடர்ந்து வரும் தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்கானிப்பது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணியேயொழிய அன்றாட நிர்வாக அதிகாரங்களையும் கையிலெடுத்துக்கொள்ளுவதில்லை. இன்று நாடு முழுவதும் எல்லா பணிகளையும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க செயல்படுத்தி இந்திய ஆட்சியாளர்களும் அரசியல் அமைப்புச்சட்டம் தங்களுக்கு இட்ட பணியை செவ்வனே செய்யாது கடமையில் தவறி வருகின்றனர். இதற்காக அவர்கள் கூறும் சாக்குப் போக்கு தேர்தல் விதிமுறைகள் நிலுவையில் உள்ளன என்று.

தேர்தல் விதிமுறைகள், தேர்தலை எல்லருக்கும் சமமாக நடத்து வதற்காக ஏற்படுத்தப்பட்டவையே ஒழிய எல்லா அரசு நிர்வாகங்களிலும் அவற்றை கொண்டுவந்து திணிப்பது அல்ல. தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தேர்தல் ஆணையம் தான் இந்திய அரசு என்ற நிலைக்கு இன்று நிலமை மாறிக்கொண்டுவருகிறது, இது தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது.

சென்னையில் இன்று நான்கு கணினி நிறுவனங்களை மூடி உத்தரவிட்ட தேர்தல் ஆணையம் கொஞ்சம் கூட யோசனைசெய்யாமல், கண்மூடித்தனமாக செயல் பட்டுள்ளது. நிறுவனங்களுக்கு விடுப்பு அளிக்கும்பொழுது அவை அளிக்கும் சேவைகளை வைத்து அவை மூடப்படவேண்டுமா அல்லது மூடப்படாமல் அதே சமயத்தில் ஓட்டளிப்பதற்கு அனைத்து ஊழியர்களுக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர உத்தரவிடப்பட வேண்டுமா என்பதைச் சிந்தித்திருக்கவேண்டும்.

சில சேவை நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு சேவை அதுவும் அத்தியாவசிய சேவையளிப்பவை. நம்முடைய நாட்டிலும் மருத்துவமனைகள், தீயனைப்பு, பால், போன்ற அத்தியாவசிய தொழில்கள் விடுப்பு விடப்படவில்லை. தேர்தல் ஆணையம் என்ன செய்திருக்கவேண்டும். சேவை நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் மாற்று முறையில் வேலைக்கு வந்து அதேசமயத்தில் ஓட்டளிக்கும் வாய்ப்பையும் அளிக்குமாறு உத்தரவிட்டிருக்கவேண்டும். 24 மணி நேர சேவை மையங்களை மூடி உத்தரவிடுவது அரசியல் சட்ட விதிகளுக்கு முரணானது. ஒருவர் ஓட்டளிக்க அதிகம் சில மணி நேரங்கள் செலவிட்டால் போதுமானது.

அதேசமயத்தில், இன்று சார்ஜாவில் எத்தனை விளையாட்டு வீரகள் ஓட்டளிக்காமல் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள், எத்தனை ஆயிரம் ஊழியர்கள் அதற்காக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாகள், இத்தகைய இந்திய விளையாட்டுத்துறையின் கீழ் வரும் விளையாட்டுத் திருவிழா எப்படி தேர்தல் நேரத்தில் நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டது? போன்ற கேள்விகள் இனி வரும் பொதுநல வழக்குகளின் மூலமே விடையளிக்கப்படும் என்றே எண்ணுகிறேன்.

ஆணைய அதிகாரிகள் உச்சாயத்திற்கு (அதிக பிரசங்கித் தனமாக) செயல்படுவதை (கேஜ்ரிவால் போல) நிறுத்திக்கொள்ளவேண்டும் இல்லையேல் அவற்றின் செயல்பாடுகளிலும் நீதிமன்றங்களின் தலையீடு தவிர்க்க முடியாததாகிவிடும்.

பரமன்.

Comments

comments