மீன் பிடித்தல் ஒரு புதுமையான அனுபவம்.

மீன் பிடித்தலில் விருப்பம் உள்ளவரா நீங்கள்? மீன் பிடித்தலை ஒரு தொழிலாகச் செய்வதிலும் அதை பொழுதுபோக்காக அல்லது தேவைக்காக செய்வதிலும் வேறுபாடுகள் பல உள்ளன. பொழுதுபோக்குக்காக அல்லது அன்றாட வீட்டுத் தேவைக்காகவோ மீன்பிடித்து வந்து அதை குழம்பாக வைத்தும், வறுவலாக வறுத்தும் சாப்பிடுவது ஒரு புதுமையான அனுபவம்தான்.

கடலில் மீன் பிடிப்பதுவும், நன்னீரில் அதாவது குளங்கள், கண்மாய்கள், ஏரிகள், ஆறு மற்றும் ஆற்றுப் படுகைகள் போன்ற நீர்நிலைகளில் மீன்பிடிப்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன. எனக்கு கடலில் சென்று மீன்பிடித்து அனுபவம் இல்லை என்றாலும் நன்னீர்நிலைகளில் பல முறை மீன் பிடித்திருக்கிறேன். கிராமங்களில் பலவிதமான நுட்பங்களை பயன்படுத்தி மீன்பிடிப்பார்கள் அதில் ஒன்று ஓட்டை விழுந்த மரங்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது.

படத்தில் காட்டியுள்ள படியிலான ஓட்டை விழுந்த மரம் ஒன்றை எங்கிருந்தாவது கொண்டுவந்துவிடுங்கள். இந்த மரத்தை கொண்டுபோய் கண்மாய் அல்லது ஏரியில் அதிக மனித நடமாட்டம் இல்லாத இடமாகப் பார்த்து கரையிலிருந்து கொஞ்சத் தூரத்தில், மொத்த மரமும் தண்ணீருக்குள் இருக்குமாறு போட்டுவிட்டு வீட்டிற்கு வந்து விடுங்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அந்த இடத்திற்குப் போய், மரத்தின் ஒரு பக்கத்தை கையில் அடைத்துக்கொண்டு மறுபக்கத்தை கொஞ்சம் தண்ணீரை விட்டு உயர்த்திப் பிடித்து கரைக்கு தூக்கிவாருங்கள். இன்னொரு பக்கத்தின் வழியே மீன் தண்ணீருக்குள் விழுந்து விடாதபடி தூக்கிப் பிடிக்க வேண்டும். தினசரி உங்களுக்கு மீன் உறுதி. விலாங்குமீனோ, உழுவைமீனோ, விராக்கெண்டையோ… கட்டாயம் உங்கள் வீட்டில் மீன் குழம்புதான்.

பரமன்.

Comments

comments