விவாதமாகும் நீதித்துறையும் அதன் உத்தரவுகளும்

மக்களாட்சியின் முக்கிய தூண்களில் ஒன்றான நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மிக விவாதத்திற்குறியனவைகளாக மாறிவருகின்றன. பல காலங்களாக நீதிமன்றங்களைப் பற்றி விவாதிப்பதோ, விமரிசிப்பதோ, அதன் செயல்பாடுகளில் அதிர்ப்தி தெரிவிப்பதோ ஒரு முறையற்ற செயலாகவும், நீதிமன்றங்களை ஏதோ ஒரு வழியில் அவமதிப்பது போன்றதோர் வழக்கமாகவும் கருதப்பட்டுவந்தது. அந்த காலகட்டங்களில் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பிருந்தன, நீதிமன்ற உத்தரவு வந்தால் அதை சிரமேற்கொண்டு நிறைவேற்றவேண்டியது அரசின் கடமையாக இருந்தது. அதனாலேயே, மத்திய மாநில அரசுகளும் நீதிமன்ற உத்தரவுகளுக்குப்பயந்து செயல்பட்டுவந்தன. ஆனால் சில வருடங்களாக, அதாவது கடந்த பத்துவருட காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாகத் தொய்வுநிலையில் இந்நிலை மாறி நீதிமன்றங்களும் அரசியல் காழ்ப்புணர்வுகளை வெளியிடும் இடமாகவும், அரசியல் சூழலுக்கு ஏற்ப உத்தரவுகளை வழங்கி ஒரு சார்புநிலை கொண்டதாகவும், சில இடங்களில் அரசுகளும் அவர்களுடைய கொள்கைகளுக்கு ஏற்படும் எதிர்ப்புகளுக்குப் பயந்து நீதிமன்றங்ககளின் வழி அவற்றை நடப்பாக்க முயன்றதுவும் கண்கூடு.

அதுமட்டுமல்லாது, நீதிமன்றங்களில் தீர்க்கப்படாமல் தேங்கியிருக்கும் வழக்குகளின் எண்ணிக்ககை மலை போல பன்மடங்கு பெருகியிருக்க, நீதிநிர்வாகத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவரமுடியாத அளவிற்கு நீதிமன்றங்களால் போடப்படும் முட்டுக்கடைகள், புதிய நீதிக்கொள்கைகள், நீதிபதிகள் நியமனம், நீதிமன்றங்களில் நீதிபதிகளின் தரம், நீதிமன்றங்களில் வழக்குகளை தீர்ப்பதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் ஆகியவற்றில் எந்தவித முன்னேற்றமும் காணமுடியவில்லை.

காலத்தால் தீர்க்கவேண்டிய பல வழக்குகள் நீண்டகாலங்களாகத் தீர்க்கக்கப்படாமலேயே இருப்பதால் அந்த வழக்கின் உண்மையான நோக்கமும் தோல்வியில் முடிவதோடு நீதி வழங்கப்படாமலேயே முடிவுற்றுவிடுகிறது. இது சட்டவியல் கொள்கைகளின்படி இயற்கையான நீதி மறுக்கப்பட்டதற்குச் சமமானதாகும். எடுத்துக்காட்டுக்கு தேர்தல் வழக்குகளில் ஐந்துவருடங்களாகியும் ஒரு வழக்கு தீர்க்கப்படாமல் இருப்பது ( சிதம்பரம் அமைச்சராக தனது பதவிக்காலம் முழுவதையும் அனுபவித்துவிட்டார் இனிமேல் அவரது தேர்வு செல்லாது என்று தீர்ப்பு வருமாயின் அதனால் என்ன பயன்?). அது போல செல்வி ஜெயலலிதாவின் சொத்துவழக்கு உச்சநீதிமன்றத்தில் பல மாதங்களாக தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்திவைக்கவேண்டிய தேவை என்ன? அதுவும் உச்சநீதிமன்றம் எந்த ஒரு வழக்கையும் விசாரிக்கப்போவதில்லை அவர்கள் முன் வைக்ககப்படும் அனைத்தும் சட்டத்தின் கேள்விகளே? அவற்றை ஆய்வு செய்த பின்னர் உத்தரவைப் பலமாதங்களாக நிறுத்திவைப்பது நீதிமன்றங்களின் மீது அவநம்பிக்கையை உண்டாக்கவே செய்யும்.

இவை அவ்வாறு இருக்க, பல உயர்நீதிமன்றங்கள் தங்களுடைய கடமை நீதி வழங்ககவேண்டியதாக இருக்க, அக்கடமையைச் சரியாக செய்யாமல் பொது அரசு நிர்வாகம் செய்யவேண்டிய கொள்கை முடிவுகளை உத்தரவுகளாக அளித்துவருகின்றனர். தமிழகத்தில் இருசக்கரவாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உத்தரவுகள் நீதிமன்றத்திலிருந்து வரவேண்டிய தேவையில்லை. அப்படி உத்தரவு இடும் நீதிமன்றங்கள் ஏன் சாலைகளைப் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புணரமைக்க அரசுக்கு உத்தரவிடலாம், பழைய பேருந்துகளை மாற்ற உத்தரவிடலாம், ஏன்? சட்டப்படி 55 பேர்கள் மட்டுமே செல்லக்கூடிய பேருந்துகளில் 100 பேர்களுக்கு மேல் பயனம் செய்வதை தடை செய்து உத்தரவிடலாம்… அப்படியே நீதிபதிகள் மருத்துவமனைகள், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும், மாவட்ட நிர்வாகம், சாலைப் போக்குவரத்து என்று கையில் எடுத்துக்கொள்ளலாமே?

ஆக தன்னுடைய எல்லையை விட்டு மக்களாட்சியின் பிற தூண்களின் செயல்பாடுகளுக்கு மற்றொருவர் ஊடுருவுவது அதனை (மக்களாட்சியின் அடிப்படையையே) குறுகிய காலத்தில் செயலிலக்கச் செய்ய ஏதுவாகும்.

இன்னும் சொல்லப்போனால், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடவேண்டும் என்று எத்தனை முறை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது? ஐந்து அல்லது ஆறுமுறை. ஒவ்வொருமுறையும், கர்நாடக அரசு அதனை நிறைவேற்றவில்லை, உச்சநீதிமன்ற நீதிபதிகள், அதனுடைய உத்ததரவை நிறைவேற்றவேண்டிய அதிகாரமுள்ளவரை நேரில் ஆஜராக்கி அவரைத் தண்டித்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இது உச்சநீதிமன்ற உத்தரவுகளுடைய அதிகாரத்தை கேலிக்கூத்தாக்குவதுடன் பின்னாளில் பிற அதிகார மையங்களும் இது போன்ற உத்தரவை செயல்படுத்ததாமல் போவதற்கான சாத்தியகூறுகளை அதிகமாக்குகிறது.

நீதிமன்றங்கள் தன்னைத் தானே ஆய்வு செய்து காலத்தின் கட்டாயத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. கீழ் நிலை சிவில் நீதிமன்றங்களில் ஒவ்வொரு உத்தரவுக்கும் இவ்வளவு என்று லஞ்சம் கொடுத்துத் தான் உத்தரவுகளை வாங்கவேண்டியுள்ளது. உத்தரவுக்கும் காசு, தடையுத்தரவுக்கும் காசு என்று கடுமையாக லஞ்சம் கொழிக்கும் ஒரு துறையாக நீதித்துறை விளங்கிவருகிறது.

சில ஆண்டுகளுக்குமுன்பு சென்னை உயர்நீதிமன்ற பசுமை அமர்வு தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் நிலத்தடிநீரை குடிநீர் பாட்டில் நிறுவனங்கள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் உறுஞ்சுவதற்கு தடை விதித்தது. தொழில் நஷ்டப்பட்ட நிறுவனங்கள், இருபது லட்சம் செலவு செய்து உச்சநீதிமன்றத்தில் ஒரே நாளில் தடையுத்தரவு பெற்று தொடர்ந்து நீரை உறிஞ்சி வருகின்றனர். இங்கு எத்தகைய நீதி வழங்கப்பட்டது? 20 லட்சம் ஒரு உத்தரவுக்கும், ஒரு தடை உத்தரவுக்கும் இடையில் பணப்பறிமாற்றம் மற்றபடி எந்த வித நன்மையும் இல்லை.

ஆக, புதிய நீதிபதிகள் நியமனக் கொள்கையைச் செயல்படுத்துவதோடு நீதிமன்றங்களையும் தங்களுடைய நல்ல தீய செயல்பாடுகளுக்குப் பொறுபேற்கவும், உள்நோக்கத்தோடு வழங்கப்பட்ட தவறான தீர்ப்புகளுக்கு அந்நீதிபதிகளே பொறுப்பேற்கவும், அவர்களுக்கும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உண்டு என்ற நிலையை உறுவாக்கவும் வேண்டியது நமது தலையாய முதல் பணி.

-பரமன்.

Comments

comments