கடைமடையர்கள்

கடைமடை(யர்கள்)
Lower riparian

ஏன் கடைமடையர்கள் என்ற பெயர் புழக்கத்திற்கு வந்தது என்று எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்துகொண்டிருக்கும்பொழுது இந்த கடைமடையர்களைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

இந்த கடைமடையர்கள் உண்மையிலேயே மடையர்கள் என்று நினைக்கும் போது உங்களுக்கு நகைக்கவே தோன்றும். காவேரிப் பாசன கடைமடையர்களுக்காக போராட்டம் செய்யும் பல மடையர்கள் தங்களுடைய கடைமடை உரிமை எந்தவித நஷ்டஈடுகளும் தரப்படாமலே முதல்மடையர்களால் சுரண்டப்பட்டுக்கொண்டிருப்பது பற்றி ஒரு சிறு அறிவும் இல்லாமல் காவேரி கடைமடை உரிமைக்காக மட்டும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் நான் இன்று உங்களுக்குச் சொல்லப்போவது வைகை கடைமடையர்களைப் பற்றி.

வைகைநதியைப் பொறுத்தவரை, மதுரைக்காரன் எல்லாம் கர்நாடகாகாரர்களாவும், சிவகங்கை, இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கடைமடையர்களைத் தமிழர்களாகவும் தான் உருவகிக்கவேண்டும். முன்பெல்லாம் மழைக்காலங்களிலாவது முகவை (இராமநாதபுரம்) பெரியகண்மாய்க்கு வந்துகொண்டிருந்த ஆற்றுநீர் இபோழுது பரமக்குடி பகுதிக்குக்கூட வந்து சேருவதில்லை. மானாமதுரைக்கு அநதப் பக்கமே, புதிய புதிய தடுப்பணைகளைக் கட்டி, புதிய கால்வாய்களை உண்டாக்கி, உண்மையில் தண்ணீர் கொஞ்சநஞ்சம் வந்தாலும் அவற்றை அங்கேயே தடுத்துவிடுகிறார்கள்.

ஆக இராமநாதபுரம் கடைமடையர்களின் கொஞ்சநஞ்ச விவசாயத்திற்கு தண்ணீர் பெரியகண்மாய்க்கு வரவில்லை என்றாலும், வருகிற அந்த சிறிதளவு நீர் அந்த பகுதியின் நிலத்தடி நீர் உயருவதற்காகவாவது காரணமாக இருந்தது. அந்த நிலத்தடி நீருக்கும் இப்பொழுது வழியில்லாமல் செய்துவிட்டார்கள் இந்த கர்நாடகமதுரைக்காரர்கள். – இதில் சிவகங்கைகாரர்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஆக கடைமடை உரிமை என்பது நிர்வாக ரீதியில் மாநிலங்களாகப் பிளவுபட்டவர்களுக்கு மட்டுமல்ல, சொந்த மாநிலத்தில் உள்ள கடைமடையர்களுக்கும் உண்டு என்று நமது அரசியல் கடைமடையர்கள் உணரவேண்டும்.

முதல்மடைப்பகுதியில் புதிய புதிய பாசன நிலங்களைப் பெருக்குவதும், இடையிடையில் தடுப்பணைகளைக் கட்டி நீர்வழியைத் தடுப்பதுமாகிய திட்டங்களால் கடைமடையில் குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலை காவேரி ஆற்றுப் பகுதியில் மட்டுமில்லை எல்லா ஆற்று பாசனப் பகுதிகளிலும் இருக்கிற நிதர்சனமான உண்மை. இதை மக்கள் மாநில உரிமை என்றுமட்டும் பார்க்காமல் கடைமடை உரிமையை சொந்தமாநிலங்களிலும் நிலைநாட்டவேண்டும் என்று ஆளும்வர்க்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

-பரமன்

Comments

comments