அடிப்படைக் கல்வியின் அவசியத் தேவை – மாற்றம்

நான் ஆண்டுகள் பலவாக விவாதித்தும் சிந்தித்தும் வருவது, அடிப்படைக் கல்வியில் கொண்டுவரும் மாற்றத்தின் மூலமாக எப்படி நாம் கூடுதல் சதவீதத்தினரை கல்வியறிவு பெறவைப்பது என்பதைத் தான். நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் காலத்தில் சாதாரணமாக 100 லிருந்து 150 மாணவ மாணவியர் முதல் வகுப்பில் படித்தனர். ஆனால் அவை குறைந்து கொண்டே வந்து தோராயமாக 90 மாணவர்கள் ஆறாம் வகுப்பில் படித்தனர், பின்னர் 25 லிருந்து 30 மாணவர்கள் மட்டுமே பத்தாம் வகுப்பிற்கு வந்து சேர்ந்தனர். அ,ஆ, இ,ஈ, உ என ஐந்து பிரிவுகளாக இருந்த ஒன்றாம் வகுப்பு குறைந்து அ, ஆ, இ என்று ஆறாம் வகுப்பிலும், பின்னர் ஒரே ஒரு பிரிவு வகுப்பு மட்டுமே பத்தாம் வகுப்பிலும் இருந்தது. இன்றும் எங்கள் ஊரில் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 150 லிருந்து பத்து ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை 30 ஆகிய காரணம் என்ன? மீதம் 100லிருந்து 120 மாணவ மாணவியருக்கு என்ன ஆனது? ஏன் அவர்கள் பள்ளியை விட்டு அகன்றனர்?. அதனைத் தொடர்ந்து ஆராய்ந்தோமானால் சிலர் படிப்பதற்காக வேறு இடங்களை நாடியிருக்கலாம். அவ்வாறு 30 மாணவர்களை கழித்தாலும் 70 லிருந்து 90 பேர்கள் எங்கே? ஏன் படிப்பை விட்டு விட்டனர்? அவர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1. குடும்பச் சூழல் காரணாம வேலைபார்ப்பதற்காக படிப்பை நிறுத்தியது

2. தொடர்ந்து படிக்க வைக்கப் பணமில்லாமலும் படிப்பை நிறுத்தியது

3.பெண்டிர் வயதுக்கு வந்தவுடன் தொடர்ந்து படிக்க வைக்க விரும்பாமல் படிப்பை நிறுத்துவது. என குறைந்துகொண்டே போய்

4.பெரும்பாலான மாணவர்கள் சரியாகப் படிக்காததால் வகுப்புகளில் தகுதித் தேர்வில் தோல்வியடைந்து அதே வகுப்பில் இருக்க வெட்கி, நாணி பள்ளிக்கு வராமல் படிப்பை நிறுத்துவது.

இவ்வாறு பள்ளிப்படிப்பை நிறுத்தியவர்களில் என்னுடைய கவனத்தை ஈர்த்தவர்கள் இந்த நான்காவது வகையைச் சார்ந்தவர்கள்தான். இவ்வகையில் படிப்பை நிறுத்துபவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இதற்கு என்ன செய்யலாம். பள்ளியில் தேர்வுகளில் தேல்வியுரும் மாணவர்களை மேல் வகுப்புகளுக்கு அனுப்பாததால் என்ன நன்மை, அவ்வாறு அனுப்பினால் என்ன தீமை விளையப்போகிறது என்பதை சிந்தித்துப் பார்த்தோமானால் ஒரு முக்கிய மாற்றம் ஆரம்பக்கல்வியில் நாம் கொண்டுவரவேண்டியது அவசியம் என்பது புலனாகும். அந்த மாற்றம் என்று நான் கருதுவது மேல்வகுப்புக்குத் தேர்வு பெறத் தகுதிபெறும் முறையை முற்றிலுமாக உயர்நிலைப் படிப்புவரை அதாவது பத்தாம் வகுப்புவரை நீக்குவது தான்.

பொதுவாகவே மணவப் பருவத்தில் தோல்வியுரும் மாணவ மாணவியர் மீண்டும் பழைய வகுப்பிலேயே தனக்கு குறைந்த வயதுடைய, தனக்குத் தெரிந்து தன்னுடைய இளைய மணவர்களுடன் படிக்க நாணுவர். இது பெரும்பாலான மாணவர்களை பள்ளிக்கு தொடர்ந்து சென்று படிப்பதிலிருந்து தடுத்திருக்கின்றது என்றால் அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அதுமட்டுமல்லாது இவ்வாறு தேல்வியுரும் மாணவர் யாரும் படித்த சமூகத்திலிருந்தோ அல்லது உயர்சாதிப் பிரிவிலிருந்தோ வருபவர்கள் அல்லர் ஆனால் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, கல்வியறிவு இல்லாத பெற்றொர்களுடைய குழந்தைகளாகத்தான் இருப்பர். அதுவே நமக்கு எழுத்தறிவித்தலிலும், கல்வியறிவித்தலிலும் மிகப் பெரிய தடையாக விளங்கிவருகிறது.

அது மட்டுமல்லாது குழந்தைகள் உளவியலின்படி அணுகினோமேயானால் இளையபருவத்தில் மாணவர்கள் கல்வியின் தேவையையும், அதனால் விளையப் போகும் நண்மைகளையும் அந்த அளவுக்கு அறிந்தவர்களாகவோ, அல்லது உணர்ந்தவர்களாகவோ இருக்கப்போவது இல்லை அதிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு சொல்லவே வேண்டியதில்லை.

தேர்வில் தோல்வியிரும் மாணவணை அவனுடைய அடிப்படைக் கல்வியில் ஏற்படும் தேல்வியினைக் கொண்டு அவனுடைய எதிர்காலத்தை, அவனுடைய அறிவுத்திறமையை அளவிடுதலும் கடினம். ஒவ்வொரு மாணவனுக்கும் தன்னுடைய மாணவப் பருவத்தின் ஒரு பகுதியில் திருப்புமுனை ஏற்படுகிறது அது எப்பொழுது எப்படி வரும் என்பதை நாம் அருதியிட்டு உரைக்கமுடியாது. அந்த நிலையில் தான் அவன் படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்கிறான். படித்த தாய்தந்தையருடைய குழந்தைகள் அதை மிகக் குறைந்த வயதிலே பெறுகிறார்கள், கல்வியறிவு அற்ற பெற்றோருடைய குழந்தைகள் அதை மிகவும் தாமதமாகத் தான் பெருகிறார்கள்.

அது மட்டுமல்லாது அம்மாணவன் மேல்வகுப்பிற்குத் தகுதிபெற்றுச் செல்வதினால் கல்வித்திட்டத்திற்கோ, அல்லது அவனுடன் பயிலும் பிற மாணவர்களுக்கு தகுதி நிலையில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை ஆனால் இந்த கல்வியில் பின் தங்கிய மாணவன் கூடுதல் வாய்ப்பைப் பெருகிறான் சில சமயங்களில் சக மாணவர்களின் நல்ல நட்பினால் உந்தப்படுகிறான். அவனால் பின்னர் அனைவருக்கும் சமமாக படிக்க, தேர்வில் வெற்றிபெற முடிகிறது அவன் அவனைத் தாயார் படுத்திக்கொள்கிறான்.

ஆகவே நம்முடைய தலையாய கடமை முதலில் தகுதி தேர்வின் மூலம் பள்ளியில் மேல்வகுப்புக்குத் தேர்வு செய்யாமல் பத்தாம் வகுப்பு வரை அனைவரையும் மேல் வகுப்புக்கு அனுப்பவேண்டும் அவ்வாறு செய்தோமானால் நிச்சயமாக கல்வியறிவு பெறும் சதவீதம் மிக அதிகமாகக் கூடும் என்பதில் ஐயமில்லை.

-பரமன்

Comments

comments