காங்கிரஸும் அதன் மொழி மற்றும் பிராந்திய பிரிவினையும்

காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் மொழிப்பிரச்சனையைக் கையில் எடுக்கும் என்று ஏற்கனவே எழுதியிருந்தேன். அது மொழியை மட்டுமின்றி பிரந்தியப் பிரச்சனையையும் துவக்கியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னாள் சிதாராமையா எழுதிய கட்டுரையில், கர்நாடகாவில் கன்னடமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், இந்தி திணிப்பை அறவே அழிக்கவேண்டும் என்றும், அதிகாரப் பகிர்வு செய்து மாநிலங்களுக்கு சுயமாக பொருளாதார முடிவுகள் எடுக்க வகைசெய்யும் சட்டங்கள் ஏற்படுத்தவேண்டும் என்றும், தனியான ஒரு கொடியை மாநிலங்கள் ஏற்படுத்திகொள்வதில் எந்த ஒரு தீங்கும் இல்லை என்றும் எழுதியிருந்தார்.

அதே சமயத்தில் தென்மாநிலங்களில் இருந்து பெறப்படும் பெரும்பாண்மை வரிப் பணத்தைக் கொண்டு வடக்கு மாநிலங்களை வாழ்வித்துக்கொண்டிருக்கிறது இந்திய அரசு என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

படிப்பறிவு, உயர்கல்வி போன்றவற்றில் முன்னேறிய தென்மாநிலங்கள் மக்கள் தொகையை வெகுவாகக் கட்டுக்குள் கொண்டுவந்தன, அது பொருளாதாரத்தில் முன்னேறவும் ஒரு படிக்கல்லாக அமைந்தது. ஆனால், மத்திய அரசோ மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டே தன்னுடைய நிதி ஒதுக்கீட்டை செய்துவருகிறது. இது மக்கள் தொகை, குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்லும் மாநிலங்களுக்கு தண்டனையாகவும், ஊழல், முறையற்ற ஆட்சி, மக்கள் தொகை குறைப்பில் சரியான கவனமின்மை, பொருளாதாரத்தை மேம்படுத்த சரியான திட்டங்களைச் செயல்படுத்தாத மாநிலங்களை ஊக்குவிப்பதாகவும் அமைகிறது.

சிதாராமையாவின் இந்தக் கருத்து முற்றிலும் ஏற்புடையதே. அதனால் தான் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு பத்துவருடத்திற்கும் பாராளுமன்றத் தொகுதி எல்லைகளையும், மாநிலங்களின் பாராளுமன்றத் தொகுதி எண்ணிக்கையையும் மாற்றியமைக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டவிதியை 1971க்குப் பிறகு செயல்படுத்தாமல் நிறுத்திவைத்தது அன்றைய இந்திராகாந்தி அரசு. இந்த விதி அமல் படுத்தப்பட்டால், மக்கள் தொகை குறைந்த மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையில் பாராளுமன்றத் தொகுதிகளும் மக்கள் தொகையைக் குறைக்காத மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளும் வந்துவிடும். இது பிராந்திய சமநிலையை வெகுவாகப் பாதிக்கும். அதுபோக மாநில அரசுகள் எதிர்காலத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தமாட்டார்கள்.

இதே சூழல் நிதி ஒதுக்கீட்டிலும் இருப்பதையே சிதாராமையா சுட்டிக்காட்டியுள்ளார். இருந்தாலும் இது ஒன்றும் புதிய விடயம் அல்லவே, சமீபத்தில் கர்நாடக அரசுக்கு என்று புதிய கொடியை ஏற்படுத்திய அவர், தமிழகத்தை உதாரணமாகக் கொண்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு மெட்ரோ இரயில் திட்டத்தில் வைக்கப்பட்ட இந்தி எழுத்துப் பலகைகளுக்கு மக்களிடம் ஏற்பட்ட எதிர்ப்பினைக் நோட்டமிட்ட அவர் பிராந்திய பிரச்சனைகளையும், மொழிப்பிரச்சனையையும் மையமிட்டு வரும் தேர்தலை அனுகுவதற்கு செய்திருக்கும் உத்தி காங்கிரஸ் போன்ற ஒரு தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு முரணாகவே இருக்கிறது.

இதே நேரத்தில் நம்முடைய ஸ்டாலின் அவர்களும், திராவிட நாடு என்று ஒன்று உருவானால் அதற்கு திமுக ஆதரவு அளிக்கும் என கூறியிருப்பதை அரசியல் பார்வையாளர்கள் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமான கூற்றாகவே கருதுகிறார்கள். இது அவருடைய அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. அண்டை நாட்டில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் போது அதை தடுத்து நிறுத்த திரணியில்லாமல் ஆண்ட திமுக ஒரு திராவிட நாட்டை உருவாக்கும் அளவிற்கு மக்கள செல்வாக்கு உள்ள கட்சியாக இருக்கிறதா என்றால் அது நிச்சயமாக இல்லை. ஆனால் தேர்தலுக்காக மட்டும் பிரிவினைவாதத்தை கையில் எடுத்தால் அது தாக்கித் திரும்பும் குருந்தடியைப் போன்று ஏற்கனவே அடிபட்டு கிடக்கும் திமுகவை தாக்காமல் விடாது.

-பரமன்

Comments

comments