கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு
இன்றைய இளைய தலைமுறையினருக்கு இடஒதுக்கீடு பற்றிய சரியான அறிவு இல்லை என்பதும் அதுபற்றிய தெளிவான அறிவு அவர்களுக்கு ஊட்டப்படவேண்டும் என்பதிலும் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இல்லை. இடஒதுக்கீடு பற்றிய விவாதங்களில் உயர்சாதியினர் போன்று பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் கலந்துகொண்டு தம்முடைய வாதங்களை எடுத்து வைக்க முன்வருவதில்லை என்பதும் வருத்தம் அளிக்கும் செய்தியே.
கடந்த ஆயிரக்கணக்கான வருடங்களாக நூறு விழுக்காடு இடஒதுக்கீட்டை தானாகவே எடுத்துக்கொண்ட உயர்ஜாதியினர் இன்று அவை பறிக்கப்பட்டு அதற்குப் பதிலாக வேறொருவருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பொழுது மனம் புழுங்குவதும், பொங்கியெழுவதும், போராட்டம் நடத்துவதும் இயல்பே. ஆனால் அவர்கள் இச்சமயத்தில் இங்கே முன்வைக்கும் வாதமோ “அறிவு மற்றும் சாதனைத் திறன்” பற்றியது. இடஒதுக்கீடு காரணமாக வளர்ந்துவரும் இந்திய தேசத்தில் அறிவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும், இது வளர்ச்சியில் மிகப்பெரிய தடைக்கல்லாக முன்னிற்கும் என்பது இவர்களுடைய வாதம்.
தனியார் நிறுவனங்களும் இதில் சலைத்தவர்கள் இல்லை. ஆசிம் பிரேம்ஜி, தன்னுடைய தொழிலானது அறிவு சார்ந்த பணித்துறை, இங்கு நான் அறிவு மற்றும் சாதனைத்திறன் அடிப்படையிலேயே வேலை வாய்ப்பு வழங்கமுடியும் என்று அறிவித்திருக்கிறார். இடஒதுக்கீடு என்பது தகுதியான மாணவர் வரிசையில் பின் தங்கிய வகுப்பினருக்கு சரியான சதவீதத்தில் நிரவல் இருக்கவேண்டும் என்பதேயொழிய அது முட்டாள்களை வேலைக்கு வைத்துக்கொள் என்பது இல்லை என்று அவர் அறியாமலிருக்கிறாரா என்ன?
இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை தமிழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டான மாநிலமாக விளங்குவது கண்கூடு. இன்று அனைத்துத் துறையிலும் அனைத்துவகுப்பினரும் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். பொருளாதார ரீதியில் நன்கு வளர்ந்துள்ளது. எத்தனையோ உயர்வகுப்பினர் என்று கூறிக்கொள்ளும் அறீவு ஜீவிகள் தாமிழகமென்ன நாட்டைவிட்டே வெளியேறிவிட்ட பொழுதிலும் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் வெற்றிநடை போடுகிறது. வழக்குரைஞர்கள், மருத்துவர், பொறியியலார் என எல்லாத்துறைகளிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஒருகாலத்தில் வழக்குரைஞர் என்றால் இவர் இப்படித்தான் பஞ்சகட்சம் கட்டி, நன்றாக நாமத்தை மேலே இழுத்துவிட்டிருப்பார், ஆசிரியர் என்றால் இப்படித்தான் இருப்பார் என்ற உருவ வேற்றுமை மறைந்து மங்கியிருக்கிறது. இவையெல்லாம் எப்படிச் சாத்தியப்பட்டது என்பதை ஆராய்ந்து பார்த்தால் தமிழகத்தை ஆண்ட திராவிட இயக்கங்களை நாம் மெச்சியேயாக வேண்டும்.
சீதாராம் யெச்சூரி சொல்லுவது போல ” இட ஒதுக்கீட்டால் திறமையானவர்களை உருவாக்குவது பாதிக்கும் என்று எடுத்துக்கொண்டால் நாம் மறைமுகமாக பணக்கார வர்க்கத்தினருக்கு அவ்விடங்களை ஒதுக்கியிருக்கிறோம் என்றே பொருள். எத்தனை பணக்காரர்கள் தனது அறிவுத்திறனால் உயர் மற்றும் தொழில் கல்லூரிகளில் இடங்களைப் பெருகிறார்கள்? மிக மிகக் குறைவு. ஆனால் அவர்கள் தனது பணபலத்தால் இடங்களை வாங்குகிறார்கள். வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீடுகள் ஏலமிடப்பட்டு அதிக விலைக்கு வாங்குபவர்களுக்கு இடங்கள் விற்கப்படுகின்றன. அவர்களை விட திறமையான பிற்படுத்தப்பட்ட, காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு இடம் கிடைப்பதில்லையே? ”
சிலர் பொருளாதார ரீதியிலாகத்தான் இடஒதுக்கீடு அமையவேண்டும் அவ்வாறில்லாமல் சாதிவாரியாக ஒதுக்கீடு அளித்தலால் சாதி வேறுபாடுகள் இன்னும் கூடிக்கொண்டிருக்குமேயொழிய குறையாது என்று அவரவர் அறிவுக்கு எட்டிய வாதங்களை அள்ளிவீசுவது உண்டு. ஆனால் அவர்களுடைய வாதங்கள் இந்த இடஒடுத்துக்கீடின் தேவை எப்படி ஏற்பட்டது என்பதன் வேரினை அவர் ஆராய்பவராக இருக்கவில்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
இன்று ஒடுக்கப்பட்ட சமூகம் என்று முத்திரையிடப்பட்டவர்கள் கல்வி மறுக்கப்பட்டவர்கள். அவர்கள் தாங்கள் ஏழைகள் என்பதற்காக அக்கல்வி மறுக்கப்படவில்லை. அதேசமயத்தில் ஏழைகளாக, தினந்தோறும் தமது உணவுக்கு பிச்சையெடுத்துவாழவேண்டும் என்ற சமூகக் கட்டுப்பாட்டினைக் கொண்ட உயர் வகுப்பினர் நூறுசதவீதம் கல்வியைக் கற்றனர், அது மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டது, ஏகலைவர்கள் சூழ்ச்சியால் மாய்க்கப்பட்டனர். இவற்றிற்கு எல்லாம் என்ன காரணம்?.. பணமா? இலையே இல்லை… சாதி மட்டுமே. தாழ்ந்த சாதியைச் சார்ந்தவன் அவனுக்கு அளிக்கப்பட்ட அடிமைப்பணியையே மட்டுமே செய்யவேண்டும் என்ற வர்ண பேத அடிப்படைதான். அப்படியிருக்க தனது சாதியின் காரணமாகவே கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு எப்படி பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீடு பொருந்தும்?
நேரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் திரு.விவேக் குமார் சொல்லுவது போல எப்பொழுதெல்லாம், இடஒதுக்கீடு பற்றிய செய்தி எழுகின்றதோ அப்பொழுதெல்லாம் உயர் ஜாதியினர் மட்டுமே அறிவுஜீவிகள் மற்றவர்கள் எல்லாம் அடிமுட்டாள்கள் போன்ற எண்ணத்தை ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் புள்ளியியல் அவ்வாறு காட்டவில்லை என்கிறார் அவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிவுஜீவிகளாக இருந்த அந்தணர்கள், கல்வி வழங்குவது அவர்தம் கடைமையாக இருந்தும், இந்தியா ஏன் இந்த அளவுக்கு கல்வியில் பின் தங்கியிருக்கிறது? வீர மரபினர் ஏன் ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவை அடிமைப்பட வைத்தனர்? என்று அவர் எழுப்பும் கேள்விகளில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. இவர்களை நம்பி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட சமூகம் கல்வி பெறாமல் இருக்கமுடியும்? இவர்களது அறிவுத்திறமையில் இவர்களால் முன்னேற்றத்தைக் கொடுக்கமுடியும் என்ற வாதத்தை எவ்வாறு நம்பமுடியும் என்கிறார் திரு.விவேக்.
இந்தியாவின் தற்காலத்தைய முன்னேற்றம் கூட அது தற்போது புழக்கத்தில் உள்ள இடஒதுக்கீடுகளினால் முன்னேறிய பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்ட சமுகத்தினரால் தான் என்றால் அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
-பரமன்