சித்தாந்தங்களைக் கடந்த சிந்தனை

ஏதாவது ஒரு சித்தாந்தத்தைக் (Ideology) கொண்டு சலவை செய்யப்பட்ட மூளைக்கு பகுத்தறிவு என்பதே கிடையாது. இது எல்லார்க்கும் பொருந்தும். மதரஸாக்களில், ஆர்.எஸ்.எஸ் சாகாகளில், கம்மூனிஸகோட்பாடுகளில், திராவிட நாத்திகவாதிகளின் கூடாரத்தில் என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அம்மூளை ஒற்றைவண்ணக்கண்ணாடி கொண்டு நோக்குவதற்கு மட்டுமே பழகியிருக்கும். அது ஒரு போதை, அதற்கு அடிமையானவர்களை அந்த போதைப் பழக்கத்திலிருந்து வெளிக்கொண்டுவருவது என்பது பகீரத முயற்சியாகவே அமையும்.

இப்படிப்பட்ட சித்தாந்தத்தில் மூளைச் சலவைசெய்யப்பட்ட ஒருவர் அதையும் மீறி அந்த எல்லைகளைக் கடந்து சிந்திக்கிறார் என்றால்தான் அவர் பகுத்தறிவு உள்ளவர் என்பது என்னுடைய கருத்து. பொதுவாகவே சித்தாந்திகள் மற்ற சித்தாந்தகளைப் பற்றி படிப்பதில்லை, ஆழ்ந்து அவற்றில் ஏதேனும் உண்மை புதைந்திருக்கிறதா என்று ஆய்வாரில்லை. அதனால் தான் அவருக்கு தன்னுடையது மட்டுமே சிறந்த சித்தாந்தம் என்று முழுமையாகத் தோன்றும்.

நமது அகராதியில் பகுத்தறிவு என்பது இந்து மதத்தை மட்டுமே பகுத்தாய்வு செய்யும் நாத்திகவாதம் என்று ஆகிவிட்ட சூழலில், காவிச் சித்தாந்தத்திலேயே பிறந்து வளர்ந்த பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஒரு மிகப்பெறிய பகுத்தறிவு வாதி என்பதை அறியும் பொழுது மிக வியப்பாகவே தோன்றும்.

தேர்வுக்காலம், மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கக் கூடிய நேரம், அவர்கள் மிக குழப்பம் அடையக் கூடிய தருணம், இந்த நேரத்தில் அவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களோடு அலாவலாவி, அவர்களுக்குத் தன்னாலான அறிவுரையை வழங்கிய மோடி, அவர்களிடம் சொன்ன ஒரு உண்மை இதுவரை எந்தப் பாரதப் பிரதமரும் சொன்னதில்லை, அதுவும் வலது சித்தாந்தத்தில் ஊறிவிட்ட ஒருவர்,

“உங்களோடு நான் இந்தியில் பேசுகிறேன், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களும் என்னுடைய பேச்சை நேரடியாக புரிந்துகொள்ள முடியாது, அதற்காக நான் வருத்தப்படுகிறேன். நீங்கள் அனைவரும் தமிழ் மொழி பற்றி அறிவீர்கள், மிக அழகிய மொழி, நான் இன்னும் தமிழ் கற்றுக்கொள்ளவில்லை, தமிழ் ஒரு செம்மொழி, மிகப் பழைய மொழி, எல்லா மொழிகளுக்கும் முன்னோடி மொழி அதுவே”

என்று அழுத்தமாக அறிவிப்பது என்பது ஒரு பகுத்தறிவாளனுக்கு மட்டுமே முடியும்.

– பரமன்

Comments

comments